search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேட்டூர் அணை"

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கபினி அணையில் இருந்து காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மாத இறுதியில் மேட்டூர் அணை திறப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. #KabiniDam #CauveryRiver
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்குகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    தொடர்மழை காரணமாக கர்நாடக மாநிலத்தின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி மற்றும் ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.

    கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நேற்று 22ஆயிரத்து 871 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று இது 28ஆயிரத்து 383கனஅடியாக உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியாகும். நேற்று முன்தினம் 82.80 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 86.60 அடியாக உயர்ந்தது. இன்று காலை இது 90.80 அடியாக உயர்ந்து உள்ளது. கடந்த 2 நாட்களில் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து 394 கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது.

    இதேபோல் மைசூர், குடகு மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.

    இந்த அணைக்கு நேற்று முன்தினம் 17ஆயிரத்து 500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 23ஆயிரத்து 487 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை 22ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நீர்மட்டம் 77.05 அடியாக உயர்ந்து உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாகும்.


    இன்னும் அணை நிரம்ப 7 அடியே உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் கபினி அணை முழுவதும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கபினி அணை நிரம்பி வருவதால், பாதுகாப்பு கருதி அந்த அணையிலிருந்து உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது. நேற்று 100கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று இது 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. நீர்திறப்பு படிப்படியாக உயர்த்தப்பட்டு வருவதால் காவிரியில் தண்ணீர் அதிகளவு வரத்தொடங்கி உள்ளது.

    கபினியில் திறக்கப்பட்ட தண்ணீர் 4 நாட்களில் தமிழக, கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு மற்றும் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேரும். இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    எனவே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முன்னதாகவே மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்ற ஆண்டு பருவமழை தவறியதாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், குறித்த காலமான ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்க முடியாமல் போய்விட்டது. இதனால் கால தாமதமாக அக்டோபர் மாதம் 2-ந்தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

    ஆனால் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. பயிர்கள் அனைத்தும் கருகியது. ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதமே கர்நாடக அணைகள் நிரம்பி வருவதால், அங்கிருந்து திறக்கப்படும் உபரிநீர் மூலம் இந்த ஆண்டு, இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு தமிழக டெல்டா விவசாயிகள் மத்தியில் எழுந்து உள்ளது.


    மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 39.94 அடியாக இருந்தது. இன்று இது 39.96 அடியாக உயர்ந்து உள்ளது. அணைக்கு நேற்று விநாடிக்கு 616 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று இது 743 கனஅடியாக உயர்ந்து உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் கொஞ்சம், கொஞ்சமாக உயர்ந்து வருகிறது.

    ஒகேனக்கல்லில் தற்போது 1,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கபினி அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. காவிரியில் வரும் நீர்வரத்தை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்பாசனத்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த 7 ஆண்டுகளாக போதுமான தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

    இந்த ஆண்டும் அதேபோல் நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆனால் கடந்த ஆண்டைப்போல இல்லாமல் இந்தாண்டு காவிரியில் திறக்கப்படும் உபரிநீரால் குறுவை சாகுபடி செய்யலாம் என்ற எதிர்பார்ப்பில் டெல்டா விவசாயிகள் உள்ளனர்.  #KabiniDam #CauveryRiver #MetturDam #SouthwestMonsoon
    ×